திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முனீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மங்கள இசையுடன் வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் முழங்க, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கோ பூஜை, கலச பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகளின் நிறைவாக மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜித்து புனிதப்படுத்தப்பட்ட கலச நீரினை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர், முனீஸ்வரர் ஆலய கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் முறைப்படி நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த ஆன்மீக விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

