தமிழ் மாதமான ஆடி மற்றும் மலையாள மாதமான கருக்கிடகத்தின் பிறப்பையொட்டி நடைபெறும் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஜூலை 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் ஜூலை 21 வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடை திறந்து, யோகநித்திரையில் உள்ள ஐயப்பனுக்கு தீபாராதனை செய்து வழக்கமான பூஜைகளைத் தொடங்கி வைப்பார். பின்னர் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் 18-ஆம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஜூலை 21 வரை நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்ட பின் நடை அடைக்கப்படும்.
ஜூலை 21ம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகளில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய “ஆன்-லைன்” முன்பதிவு துவங்கியுள்ளது.தரிசனம் மற்றும் தங்கும் விடுதி முன்பதிவு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

