காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பிரம்ம காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ மல்லிகாதீஸ்வர சுவாமி திருக்கோவிலில், கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பிரத்யேக யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. தொடர்ந்து, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் இருந்து சுமந்து வந்து, கோவிலை வலம் வந்து விமான கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வுக்கு முன்னதாக, கிராம தெய்வங்களான ஶ்ரீ சூராத்தம்மன் மற்றும் துலுக்கானத்தம்மன் ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவில், பக்தர்களுக்குப் புனித நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

