ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு. நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் வந்து பெரியபாளையத்தில் தங்கி காலையில் ஆடு, கோழி ஆகியவற்றை அம்மனுக்கு பலி கொடுத்து பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வாடிக்கை.
அந்த வகையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் ஆடை அணிந்து பெண்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுக்கின்றனர். தொடர்ந்து பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அம்மன் சன்னதியில் பக்தர்கள் வாடை பொங்கலிட்டும், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும், அங்கபரதட்சணம் செய்தும், தீச்சட்டி ஏந்தியும், அம்மனுக்கு கூழ் வார்த்தும், கரகம் ஏந்தி வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அம்மன் ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் மனதிற்கு நிறைவை தருவதாகவும், ஆண்டுதோறும் அம்மன் சன்னதிக்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் வருவதாக தெரிவிக்கின்றனர். சிறிது தூரம் கூட நடக்க முடியாத தங்களால் அம்மனை மனதில் நினைத்தால் அவரே தங்களை அழைத்துச் சென்று விடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
