தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் சுவாமி சன்னதியில் கொடியேறி திருவிழா நடைபெற்றாலும் ஆடி பூரத் திருவிழா ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை அம்பாள் சன்னதில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
அந்த வகையில் அம்பாள் சன்னதியில் ஆடி பூரத் திருவிழா கொடியேறி நாள்தோறும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருவீதி உலா நடந்து வந்தது ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து செப்பு கேடயத்தில் சுவாமி சன்னதி வந்தடைந்த காந்திமதி அம்பாள் அங்கிருந்த செப்பு தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர் நமச்சிவாய கோஷம் முழங்க செப்பு தேரினை திரளான பக்தர்கள் இழுத்து நான்கு ரத வீதிகளில் வளம் வந்து மீண்டும் கோவிலை தேர் அடைந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி பூர முளைக்கட்டு மடிநிறைக்கும் நிகழ்ச்சி நாளைய தினம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
