குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சிரசு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம்பேட்டை கஸ்பா பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 1ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பெண் குளக்கரை பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது.
கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். வழி நெடுங்கிலும் சூரத் தேங்காய் உடைத்தும், புலி வேஷம், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன் அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் கண்கள் திறக்கப்பட்டது. கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

