ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, 2026-ம் ஆண்டு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார்.
ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்களில் சுப கிரகமாகவும், ஞானம், செல்வம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரகராகவும் திகழும் குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது ‘குருப் பெயர்ச்சி’ என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம் செய்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடகத்தில் உச்சம் பெறுவது மிகவும் சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.
குருப் பெயர்ச்சி சிறப்புப் பூஜைகள்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்கள் மற்றும் குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குரு பகவானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு, குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புத் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், உலக நன்மைக்காகவும் பல ஆலயங்களில் கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் தங்களுக்கு உகந்த பரிகாரப் பூஜைகளைச் செய்து, கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபாடு செய்கின்றனர்.
பிரசித்தி பெற்ற குரு ஸ்தவங்கள்:
ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி குரு பகவானாக வணங்கப்படுகிறார்.
திட்டை – வசிஷ்டேஸ்வரர் கோயில். இங்கு குரு பகவான் ‘ராஜ குருவாக’ தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
குருவித்துறை- சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இங்கு குரு பகவான் சிம்ம குருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை உள்ளன.
குருப் பெயர்ச்சியன்று பக்தர்கள் குரு பகவானின் அருளைப் பெற அசைவம் தவிர்த்து, எளிமையான சாத்வீக உணவுகளை உட்கொண்டு விரதம் இருப்பது சிறப்பு. குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது சகல தோஷங்களையும் நீக்கி, மன அமைதியைத் தரும். தகுதியுள்ளவர்களுக்கு மஞ்சள் ஆடை, கொண்டைக்கடலை அல்லது உணவு தானம் செய்வது குருவின் அருளைப் பெற்றுத்தரும். தங்களுக்குரிய ராசிக்குரிய பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களைக் கொடுக்கும்.
இந்த குருப் பெயர்ச்சி, மக்களின் வாழ்வில் கல்வி, செல்வம் மற்றும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறவும், அமைதியும் செழிப்பும் பெருகவும் அருள்பாலிக்கட்டும்.
