ஆடி மாதம் என்றாலே பக்தி மாதம் எனலாம். பல கோயில்களில் ஆடி மாதங்களில் தான் அனைத்து விதமான திருவிழாக்களும் வரும். குறிப்பாக அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதேப் போல பெண்கள் ஆடி மாதத்தில் பல விரதங்களையும் மேற்கொள்வர்.
ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், மங்களகவுர் விரதம் உள்ளிட்டவற்றோடு, ஔவையார் விரதமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணத் தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.
விரதத்திற்கு செவ்வாய் பிள்ளையார் விரதம், பாட்டி வழிபாடு என்பது உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. குடும்ப நலன், திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.
ஆடி செவ்வாய் :
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், அத்தனை கஷ்டங்களும் விலகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. 2 குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.
கொழுக்கட்டை :
இந்த விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் அவ்வையார் விரதத்தை தொடங்குவார்கள். இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டை தயாரிப்பார்கள். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை அவ்வையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். அவ்வையார் அம்மனை நினைத்து விளக் கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. இந்த விரதத்திற்காக தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளும் கூட ஆண்களுக்கு கொடுக்கப்படுவது கிடையாது.

