காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு 42-ம் ஆண்டு தீ மிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வாசனை அபிஷேகப் பொருட்கள் மற்றும் 15 வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மைக்காக யாக வேள்வி வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்புடன் திகழவும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை செய்து அம்மனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தும் நிகழ்வும், கூழ்வார்த்தல் விழாவும் நடைபெற்றது. பின்னர், அருகிலுள்ள திருக்குளத்தில் இருந்து கரகம் வர்ணிக்கப்பட்டு, கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. அப்போது வீடுகள் தோறும் ஏராளமான பொதுமக்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி அம்மனை வரவேற்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்வாக, திருக்கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

