விநாயகர் திருவிழாவில் தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், உட்பிரகாரத்தில் வீதியுலா நடைபெறும்.
நெல்லை மாநகரின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி மாத பெருந்திருவிழாவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தக் கோயில் தமிழகத்தின் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் மத்தியில் மிகுந்த பிரசித்தி பெற்றது. விழாவின் முக்கிய சிகர நிகழ்வாக ஆசியாவிலேயே மிக அதிக எடை கொண்ட சுவாமி தேர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் ரதவீதிகளில் உலா வரும் காட்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கும்.
இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்வாகக் கடந்த மே 29-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு தனி வழிபாடு செய்யப்பட்ட பின்னர், பந்தக்காலுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வாத்திய முழக்கத்துடன் பந்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நவதானியங்கள் தூவப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பந்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருவிழா பூர்வாங்கப் பணிகள் துவங்கின. கொடியேற்றம், அலங்கார பந்தல் அமைப்பு, தேர் சீரமைப்பு, தேருக்கு தேவையான பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விநாயகர் திருவிழா கொடியேற்றம் இன்று விமரிசையாக நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த திருவிழாவின்போது காலை மற்றும் மாலை வேளைகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், உட்பிரகார வீதியுலாவும் நடைபெறும். விநாயகர் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஆனி பெருந்திருவிழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடுதல், பந்தல் அமைக்கும் பணிகள், தேர்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமடைய உள்ளன. ஆனித்தேர் திருவிழா வரும் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றிலிருந்து ஒன்பதாம் நாளான 28-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்திட திருக்கோயில் நிர்வாகம் முழு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
