உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நாளை (ஜூலை 16) ஒடிசா மாநிலம் பூரியில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பூரியில் குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டுக்காக புதிதாக மூன்று பிரமாண்ட மரத்தேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சடங்குகள் நிறைவடைந்த பிறகு, பூரி மன்னர் கஜபதி மகாராஜா தங்கத் துடைப்பத்தால் தேரை சுத்தம் செய்யும் நிகழ்வைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்படுகின்றன. பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுக்க உள்ளனர்.
சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு தேர்கள் சென்றடைந்த பின், ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து மீண்டும் ஜெகநாதர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வுடன் ஜூலை 24-ஆம் தேதி ரத யாத்திரை நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி ஒடிசா அரசு மற்றும் கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. 13 ஆயிரம் போலீசார், 1,500 மத்திய ஆயுதப்படை வீரர்கள், தேசிய பாதுகாப்புப் படை, அதிவிரைவுப் படை, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு, மோப்ப நாய் படை மற்றும் ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் 500 உயிர்காக்கும் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் விழாவை நேரலையில் காண எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 800 சிறப்பு பேருந்துகளும், 300-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, மழைநீர் தேங்காமல் வெளியேற்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

