காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், சாமிபல்லக்கை சுமந்து செல்லும் கைத் தண்டில் ஏற்பட்ட விரிசல் காரணமாக வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று நான்காம் நாள் காலை ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் திருக்கோயிலில் இருந்து வீதி உலா புறப்பட்டார்.
புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சாமியை தூக்கி செல்லப் பயன்படும் கைத் தண்டில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பாதம் தாங்கிகள் தடுமாறினர்.

உடனடியாக வீதி உலா நிறுத்தப்பட்டு விரிசல் குறித்து அனைவரும் பார்வையிட்டு மீண்டும் மற்றொரு தண்டை மாற்றம் செய்தனர்.
இருப்பினும் இந்த பணிக்கு அதிக நேரம் தேவைப்பட்ட காரணத்தினால் மீண்டும் வீதி உலா சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார்கள், பாதம் தாங்கிகள் அனைவரும் ஒருங்கிணைந்து வீதி உலாவை ரத்து செய்துவிட்டு மீண்டும் திருக்கோவிலுக்கு செல்ல முடிவெடுத்ததின் பேரில் சுவாமி வீதி உலா பாதியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் திருக்கோயிலை அடைந்தது.
மேலும் சுமார் 11.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

