திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய், புதன் மற்றும் இன்று வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் கூழ் அமுது படைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இத்திருவிழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுயம்பு திருப்பதி கெங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை மேளதாளங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு சிரசு அம்மனுக்கு அலங்காரம் ஆராதனை செய்து அதிகாலை முதல் அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று பிற்பகல் 3 மணிக்கு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்திற்கு சிரசு அம்மன் வருகை தந்து ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் சிரசு முன்பு அங்க பிரதட்சணம் செய்தும், வேண்டுதல் நிறைவேற 1008 தேங்காய் உடைத்து வழிபட்டனர் இத்திருவிழாவை காண ஆம்பூர் சுற்றுவட்டார பல கிராமங்களில் இருந்தும் குடியாத்தம், வாணியம்பாடி, வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருவிழாவை கண்டு ரசித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version