கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தின் 40-ஆம் ஆண்டு ரூபி ஜூபிலி (Ruby Jubilee) திருவிழா மிகச் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவில் 17 தேர்கள் பவனி வந்தன. மின்னொளியில் ஜொலித்தபடி தேரில் வந்த சுரூபங்களை பக்தர்கள் மெழுகுவத்தி ஏந்தி வழிபட்டனர்.
புலியகுளம் புனித அந்தோனியாருடைய திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அருண் அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு 40-ஆம் ஆண்டு ஆலயம் கட்டி, ரூபி ஜூபிலி ஆண்டை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார்.
இந்த விழா ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து புனித அந்தோனியாரை தரிசித்துச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு முழுவதும் 40-வது ஆண்டு ரூபி ஜூபிலி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, இந்த ஆண்டு முழுக்க சிறப்பிக்க இருக்கிறோம். ஆலய சீரமைப்புப் பணிகளும் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. எனவே, அந்தோனியார் உதவியைத் தேடி வாருங்கள், அந்தோனியாருடைய ஆசி பெற்றுச் செல்லுங்கள் என்று உங்களை வருக வருக என்று அன்போடு வரவேற்று, உங்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்றார்.
தற்போது வரை கிட்டத்தட்ட 20,000 முதல் 25,000 பேர் வரை வந்து சென்றிருப்பார்கள். இந்த அந்தோனியாருடைய பக்தி எல்லா சமயங்களிலும் இருக்கிறது. எல்லா சமய மக்களும் அந்தோனியாரை தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது
ரூபி ஜூபிலி ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சமூக மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், ஆலய மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடிய இந்தத் திருவிழா, கோவையில் ஒரு சிறந்த மத நல்லிணக்க நிகழ்வாக மாறியுள்ளது.

