ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் அகத்தியர் முனிவரால் வழிபட்ட திருத்தலமாகப் போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல், அகத்தீஸ்வரர் மற்றும் புவனேஸ்வரி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் வன்னிவேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ததோடு ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாடு பக்தி பரவசத்துடன் நடைபெற்றதுடன், கோவில் வளாகம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற சிவநாம முழக்கத்தால் ஆன்மிக எழுச்சி நிறைந்த சூழல் நிலவியது.

