திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை தொடங்கியது. ஆன்மீக அரசியல் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல் கோவில்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலிருந்து அரசியல் ஆன்மீக கட்சியின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவாபுரியில் உள்ள முருகன் திருக்கோவிலில் வேல் வைத்து வழிபாடு செய்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் வேல் யாத்திரை தொடங்கியது.
சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை, திருத்தணி என ஆறுபடை வீடுகளுக்கு 108 வேலுடன் யாத்திரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறுவாபுரியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வேல் வழங்கி வாரந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு, குற்ற வழக்குகளில் இருந்து மீண்டு வர ஆன்மீகமே சிறந்த பாதையாக அமையும் என்றும், மாற்றத்திற்கான முன்னெடுப்பாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

