பிரம்மதேவர் இழந்திருந்த படைப்புத் திறனை மீண்டும் பெற்ற தலம், பிரகலாதனின் மனக்குழப்பம் நீங்கிய புனிதத் திருத்தலம், மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்சீவித்துவம் அருளப்பெற்ற தெய்வீக ஸ்தலம் என பல அபூர்வ மகிமைகளை தன்னகத்தே தாங்கி நிற்கிறது திருகண்டேஸ்வரம் திருக்கோயில்.

“சீரார் வடுவூர் சிவற்கொரு நந்தா விளக்கு” என்று திருஞான சம்பந்தப் பெருமான் பாடிப் போற்றிய இந்தத் திருத்தலம், கடலூரிலிருந்து பண்ருட்டி சாலையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சோழர், பாண்டியர் காலங்களில் பல திருப்பணிகளை பெற்றுள்ளது.

பிரம்மனுக்குப் படைப்புத் திறன் அளித்த ஆனந்த பைரவர்

இத்தலத்தின் ஈசான்ய மூலையில் அருள்பாலிக்கும்  ஆனந்த பைரவர் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். பிரம்மதேவர் இழந்த படைப்புத் திறனை மீண்டும் பெற இவரே அருள்செய்ததாக தலபுராணம் கூறுகிறது.

தேய்பிறை அஷ்டமி நாளில் திராட்சைச் சாறு, மாதுளம் சாறு, தேன் ஆகியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பித்து வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கி, திருமணத் தடைகள் விலகி, நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொடுத்த கடன் திரும்ப வராமல் இருந்தாலும், இந்த நாளில் பைரவரை வழிபட்டால் வாராக் கடன்கள் வசூலாகும் என்றும் கூறப்படுகிறது.

பிணிகளை நீக்கும் ரட்சை தீர்த்தம்

இத்தலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பிரசாதம் “ரட்சை தீர்த்தம்”. வெட்டிவேர், நன்னாரி வேர், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி மஞ்சள், ரோஜா மொட்டு, செண்பக மொட்டு உள்ளிட்ட பல அரிய மூலிகைகள் சேர்த்து ஆகம முறையில் தயாரிக்கப்படும் இந்தத் தீர்த்தம், ஆனந்த பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்தப் புனித தீர்த்தத்தை பக்தியுடன் பருகினால் உடல் மற்றும் மனப் பிணிகள் நீங்கி ஆரோக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

கண்கொள்ளாக் திருவிழாக்கள்

ஆனி மாதம் ஆயில்யம் முதல் கேட்டை வரை பத்து நாட்களும், ஆடி மாதம் பரணி முதல் பூரம் வரை பத்து நாட்களும் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அப்போது ஆனந்த பைரவர் வீதி உலா வருவது பக்தர்களுக்கு அரிய தரிசனமாக அமைகிறது.

ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் அருளும் ஆனந்த பைரவரை ஒருமுறை தரிசித்து, ரட்சை தீர்த்தம் பெற்றுப் பருகினால் வாழ்வில் அமைதி, வளம், ஆரோக்கியம் பெருகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

Share.
Leave A Reply

Exit mobile version