ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் வாழ்வில் பொருளாதார நிலை, குடும்பம்,  வாக்கு மற்றும் உணவு முறை ஆகியவற்றைக் 2-ம் பாவம் (தன ஸ்தானம்) வைத்தே அறிய முடியும். அத்தகைய 2-ம் பாவகத்தின் காரகங்கள், அந்த பாவகத்தின் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள், ஒன்பது கிரகங்களும், 2-ம் பாவகத்தில் இருக்கும் போது கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

2-ம் பாவகத்தின் காரகங்கள்:

ஜாதகரின் பணம், அசையும் சொத்துக்கள், வங்கி சேமிப்பு ஆகிய பொருளாதார சூழலை 2-ம் பாவகம் குறிக்கும். குடும்ப உறுப்பினர்கள், குடும்ப உறவு முறை, பேச்சுத்திறன், வாக்கு சாதுரியம், சொல்லும் வார்த்தைகளின் உண்மைத்தன்மை ஆகியவையும் 2-ம் பாவகத்தின் காரங்களாகும். ஒருவரின் உண்ணும் உணவு மற்றும் உணவு பழக்க வழக்கங்களும் 2-ம் பாவகத்தை வைத்தே அறியலாம். முகத்தின் பொலிவு, கண் (குறிப்பாக வலது கண்), வாய், பற்கள் பற்றியும் ஜாதகரின் தொடக்கக் கல்வி பற்றியும் அறிய 2-ம் பாவகம் முக்கியம்.

சாதக – பாதக பலன்கள்:

ஒருவருக்கு 2-ம் பாவம் வலுவாக இருந்தால், அவர் சிறந்த பேச்சாளராகவும், அழகான முக அமைப்பைப் பெற்றவராகவும், தடையற்ற பண வரவு மற்றும் குடும்பத்தில் ஒற்றுமையுடன் திகழ்வார்.

அதுவே, ஒருவருக்கு 2-ம் பாவம் பாதிக்கப்பட்டிருந்தால் (தீய கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை), பேச்சில் கடுமை, கண் குறைபாடுகள், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், பண நெருக்கடி மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் உண்டாகும் இருக்கும்.

9 கிரகங்கள் 2-ம் பாவகத்தில் நின்றால் ஏற்படும் பலன்கள்:

சூரியன் 2-ம் பாவகத்தில் இருந்தால் ஜாதகரின் பேச்சில் அதிகாரம் இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

சந்திரன் இருந்தால் வசதியான வாழ்க்கை, இனிய பேச்சு, நல்ல உணவு உணவுப் பழக்கம் இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

செவ்வாய் பகவான் 2-ம் பாவகத்தில் இருந்தால், பேச்சில் காட்டமான தன்மை, குடும்பத்தில் வாக்குவாதங்கள் இருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

புதன் இருந்தால், ஜாதகருக்கு அறிவுப்பூர்வமான பேச்சு, கணக்கு மற்றும் வணிகத்தில் ஈடுபாடு இருக்கும். இனிமையான மற்றும் அறிவுரையான பேச்சுக்களால் புகழடைவார்.

குரு பகவான் 2-ம் பாவகத்தில் இருப்பது மிகச்சிறந்த அமைப்பு. பெரும் செல்வம், அழகான குடும்பம், அறிவுப்பூர்வமான மற்றும் கனிவான பேச்சு இருக்கும்.

சுக்கிரன் இருந்தால், ஆடம்பர வாழ்க்கை, விலை உயர்ந்த பொருட்களைச் சேகரிப்பதில் ஜாதகருக்கு ஆர்வம் இருக்கும். சுவையான உணவின் மீது விருப்பம் அதிகமாக இருக்கும்.

சனி பகவான் 2-ம் பாவகத்தில் இருந்தால், ஜாதகரின் பேச்சில் நிதானமாக இருப்பார். பணத்தை மிகக் கவனமாக கையாளுவார். குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

ராகு  இருந்தால், வழக்கத்திற்கு மாறான பேச்சோ அல்லது போலித்தனமான பேச்சோ இருக்க வாய்ப்பு உள்ளது. பண வரவில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

கேது பகவான் 2-ம் பாவகத்தில் இருந்தால், ஆன்மிகம் சார்ந்த பேச்சு, குடும்ப விஷயங்களில் பற்றற்ற நிலை அல்லது குடும்பத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் சூழல் ஏற்படும் சூழல் இருக்கும்.

மேற்சொன்ன பலன்கள் கிரகத்தின் ஆட்சியோ, உச்சமோ அல்லது நீச்சமோ அடைந்திருப்பதையும், அந்தந்த கிரகங்களின் தசா- புத்தி காலத்தையும் பொறுத்து மாறுபடும். முக்கியமாக லக்ன அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறார் என்பதை பார்ப்பது அவசியம்.

Share.
Leave A Reply

Exit mobile version