சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வீரபத்திரன் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பொங்கல் வைத்தும் வினோத வழிபாடு செய்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
தேங்காய் சிதறும் போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழாவுக்காக ஆடி ஒன்றாம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். சுவேத நதியில் இருந்து தீர்த்தத்துடன் வீரபத்திரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர், பின்பு அலங்கரிக்கப்பட்ட வீரபத்திரன் சுவாமியை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்,

பின்னர் கோவில் வளாகத்தில் அமர்த்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், பேய் பிடித்திருந்தால் அதை போக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
முன்னதாக பக்தர்கள் வீரபத்திரன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர், இந்த ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரபத்திரன் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

