ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வானமே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் இன்று வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெக்காளியம்மனை தரிசித்து வருகின்றனர். மேலும் எலுமிச்சை நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
உறையூர் வெக்காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்ல அது அருகாமை மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசை நின்று தரிசனம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக போக்குவரத்துக்கு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.

