சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்ச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் முகப்பெருமானுக்கு விஷேச பூஜையும் நடைபெறுகிறது.
வரும் 31-ம் தேதி வரை தினசரி காலை மற்றும் மாலையில் வாகன வீதியுலா நடைபெறும். சூரிய பிரபை, சந்திர பிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுகிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பலிக்கவுள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 27-ம் தேதி காலை தேரோட்டமும், 30-ம் தேதி காலை தீர்த்தவாரி கலசாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்வும், அதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. 31-ம் தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

