திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, எம். புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் புதிய மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன், தக்ஷிணாமூர்த்தி, பாலமுருகன், வைஷ்ணவி, மகேஸ்வரி, வேம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த ஜூன் 18-ஆம் தேதி யாகசாலை அமைக்கும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தீர்த்தக்குடம் எடுத்துவருதல், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.
இன்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்னர், திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் காட்டுப்புத்தூர், தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரியபள்ளிபாளையம், சீலைபிள்ளையார்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

