மகா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலும், கடற்கரைப் பகுதியும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பௌர்ணமி இரவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் இரவு முழுவதும் ஆன்மிக உணர்வுடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கடற்கரை மணலில் ஒரு அடி முதல் அரை அடி வரை ஆழத்தில் சிறிய குழிகளை தோண்டி, அவற்றில் செம்மண் அகல்விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். மேலும் எலுமிச்சை பழம், வெற்றிலை, மலர்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து முருகப்பெருமானை வழிபட்டனர். பின்னர் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு பௌர்ணமி நிலவை நோக்கி அமர்ந்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
இந்த சிறப்பு வழிபாட்டின் மூலம் திருமணத் தடைகள் நீங்கவும், ஜாதக தோஷங்கள் விலகவும், குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் தீரவும், மனதில் நினைத்த நல்விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பலர் குடும்பத்தினருடன் இணைந்து வழிபாட்டில் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதால் திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது. இரவு முழுவதும் உறங்காமல் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாட்டில் ஈடுபட்ட காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மகா பௌர்ணமி விழாவையொட்டி திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் ஆன்மிகமும், பக்தி உணர்வும் நிறைந்த சிறப்பான சூழல் நிலவியது.

