ராணிப்பேட்டை மாவட்டம், நபலாக் புளியங்கண்ணு ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) உத்திராடம் நட்சத்திரத்தில், காலை சுமார் 10 மணியளவில் திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி திருக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி பூஜை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கலசங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, 108 திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ கன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் இணைந்து மிகச்சிறப்பாக செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

